TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 11, 2019 (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 11, 2019

சிறந்த சேவைக்கான தேசிய விருது !!

🌟 புதுவை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநகரத்தில் முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவரது சமூக, கல்வி, இளைஞர் நலன் மற்றும் கலை மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, தில்லியில் இயங்கி வரும் இந்திய பன்னாட்டு நட்புறவுக் கழகமானது சிறந்த சேவைக்கான மகாத்மா காந்தி வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்தது.

🌟 தில்லி பன்னாட்டு வணிக மைய வளாகத்தில் நடைபெற்ற விருது அளிப்பு விழாவில், மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் குரியன், பல்கலைக்கழக முதுநிலை உதவியாளர் ஆறுமுகத்தின் சேவைகளைப் பாராட்டி, விருது அளித்து கெளரவித்தார்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், கலை, விளையாட்டு, கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், கிராமியக் கலை, மகளிர் மேம்பாடு, முதியோர் நலன், சுயதொழில் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளில் தேசிய அளவில் சிறந்த சேவை செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

🌟 விருது பெற்ற ஆறுமுகம், கடந்த 33 ஆண்டுகளாகப் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க கருத்தரங்கில் அரூர் பெண் !!

🌟 அமெரிக்காவில் நடந்து வரும் கருத்தரங்கில், தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த பெண் பிரதிநிதி புத்தமணி பங்கேற்றுள்ளார்.
இந்தியாவில், தலித், பழங்குடியின மக்களின் நிலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, அமெரிக்க அரசு சார்பில், 22 நாட்கள் சிறப்பு கருத்தரங்கு, ஜுன் 1ம் தேதி துவங்கியது.

🌟 இதில் பங்கேற்க, பழங்குடியின மற்றும் தலித் செயல்பாட்டாளர்கள், கள ஆய்வாளர்கள் என, இந்தியாவில் இருந்து, ஏழு பேர் தேர்வாகியுள்ளனர். இதில், ஆறு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

🌟 கருத்தரங்கு மட்டுமின்றி, வாஷிங்டன், மிசிசிபி, பென்சில்வேனியா போன்ற பகுதிகளில் விளக்க பயிற்சியும் நடக்கவுள்ளது.

இந்திய வம்சாவழியினருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது!

🌟 ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 3 பெண்கள் உள்பட 7 இந்திய வம்சாவழியினருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

🌟 பிரிட்டன் அரசி எலிசபெத்தின் பிறந்த தினக் கொண்டாட்டத்தையொட்டி, ஆஸ்திரேலியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 1000 பேரை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

🌟 மருத்துவத் துறையில் சிறந்து பணியாற்றிய ஜெயஸ்ரீ குல்கர்னி, இந்திய இசை மற்றும் நாட்டியக் கலையில் சிறந்த சேவையாற்றிய ஜெயஸ்ரீ ராமச்சந்திரன், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கி வரும் வினிதா ஹார்திகர் ஆகிய 3 பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

🌟 இவை தவிர பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகா சின்னதம்பி, சசி காந்த் கோச்சார், அருண் குமார், கிருஷ்ண தன நாதிம்பள்ளி ஆகிய இந்திய வம்சாவழியினரும் ஆஸ்திரேலியாவின் உயரிய விருதைப் பெற்றனர்.

🌟 கடந்த 5 ஆண்டுகளில் 80,000க்கும் அதிகமானோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு இந்தியா ரூ.100 கோடி நிதியுதவி !!

🌟 நேபாளத்தில் கடந்த 2015-இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்த வீடுகளை மறுகட்டமைக்க மேலும் ரூ.100 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

🌟 இதற்கான காசோலையை, நேபாள நிதிச் செயலர் ராஜன் கனாலிடம் நேபாளத்துக்கான இந்தியத் தூதர் மன்ஜீவ் சிங் புரி வழங்கினார்.

🌟 இந்த நிதியுதவியுடன் சேர்த்து இதுவரை ரூ.280 கோடியை நேபாளத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது.

🌟 நேபாளத்தில் கோர்க்கா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, கடந்த 2015, ஏப்ரலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர். சுமார் 8 லட்சம் வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சிவிசி இடைக்கால ஆணையராக சரத் குமார் நியமனம் !!

🌟 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) இடைக்கால ஆணையராக , ஊழல் கண்காணிப்பு ஆணையர் சரத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

🌟 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த கே.வி. செளதரியின் பதவிக்காலம் முடிவுற்றது.
காலியான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு நியமனம் மேற்கொள்ளப்படும்வரை, ஊழல் கண்காணிப்பு ஆணையர் சரத் குமார் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) முன்னாள் தலைவரான சரத் குமார், கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.

🌟 அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு அக்டோபரில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் இடைக்கால ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🌟 அரசுத் துறைகள் உள்பட அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழல்கள் குறித்து விசாரிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரும், இரண்டு ஊழல் கண்காணிப்பு ஆணையர்களும் உள்ளனர்.

🌟 பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் அதிக இடங்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு ஊழல் கண்காணிப்பு ஆணையர்களை தேர்ந்தெடுக்கிறது.
இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள், பதவியேற்ற காலத்திலிருந்து 4 ஆண்டுகள் வரை அல்லது 65 வயதை அடையும் வரை அப்பதவியை வகிப்பர். ஐபிபிஐ உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம் !!

🌟 ஐபிபிஐ எனப்படும் திவால் மற்றும் வாராக் கடன் வாரியத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ஸ்ரீராம் ஆகியோரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌟 இவர்களின் நியமனங்களுக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

🌟 ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின் பேராசிரியரான சுப்ரமணியன், கடந்தாண்டு டிசம்பரில் தலைமை பொருளாதார ஆலோசகராக மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டார்.

🌟 மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி, திவால் மற்றும் வாராக் கடன் வாரியத்தை ஏற்படுத்தியது.

2019-ல் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் !!

🌟 2019-ல் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

🌟 அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.

🌟 ஊதியம் மற்றும் விளம்பரங்களின் மூலம் மட்டும் 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார். இதன்மூலம் இந்தப் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதல்முறையாக முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

🌟 சமகால கால்பந்து நட்சத்திரமான போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 109 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 2-ஆம் இடம் பெற்றார்.

🌟 மற்றொரு இளம் கால்பந்து நட்சத்திரமான பிரேஸில் அணியைச் சேர்ந்த நெய்மர் 105 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.

🌟 முதல் 3 இடங்களில் கால்பந்து நட்சத்திரங்களின் ஆக்கிரமிப்புகளை அடுத்து 4-ஆவது இடத்தில் மெக்ஸிகோவைச் சேர்ந்த மிடில்வெயிட் குத்துச்சண்டை வீரர் சௌல் கேனலோ அல்வரீஸ் 94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெறுகிறார். இவர் சமீபத்தில் பிரபல நிறுவனத்துடன் 365 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 5 வருட ஒப்பந்தம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

🌟 5-ஆவது இடத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் உள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஃபெடரரின் வருமானம் 93.4 அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் பெரும்பகுதியாக விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக மட்டும் 86 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெறுகிறார்.

🌟 டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் ஆவார். அவர் 29.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 63-ஆவது இடத்தில் உள்ளார்.

🌟 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியராக திகழ்கிறார். 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கடைசி இடமான 100-ஆவது இடத்தைப் பிடித்தார். 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC CCSE-4 தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 11, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!