நிலக்கடலை பூச்சி மேலாண்மை…!

VIVASAYAM
நிலக்கடலை பூச்சி மேலாண்மை…!

⏩ உலகளவில் நமது நாட்டில் அதிகளவு நிலக்கடலை உற்பத்தி செய்தாலும், உற்பத்தி திறன் ஒரு ஹெக்டருக்கு 1,000 கிலோவுக்கு குறைவாகவே உள்ளது.

⏩ ஒரு ஹெக்டருக்கு சீனாவில் 2,600 கிலோ, அர்ஜென்டினாவில் 2,100 கிலோ, அமெரிக்காவில் 3,000 கிலோ ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது நாம் நாட்டு உற்பத்தி பின்தங்கி இருக்கிறோம்.

⏩ நிலக்கடலை மிகவும் முக்கியமான எண்ணெய் வித்து பயிர் ஆகும். இந்த பயிர் 70 சதவீதத்துக்கு மேல் மானாவரி நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறன.

⏩ தமிழகத்தில் சுமார் 3 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறன.

⏩ நமது நாட்டில் தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் இழப்புகளை விட, பூச்சி, நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக உள்ளன. இன்று பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை பற்றி பார்ப்போம்.

சுருள்பூச்சி தாக்குதல் :

⏩ சுண்டப்புழு அல்லது சுருள்பூச்சி என்று அழைக்கப்படும் இந்த புழுக்கள் இலைகளை துளையிட்டு உண்ணும். புழுக்கள் வளர்ந்து இலைகளை ஒன்றாக சேர்த்து கூடுபோல் அமைக்கின்றன.

⏩ இந்த புழுக்கள் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வயலை தூரத்தில் இருந்து பார்த்தால் நமது கண்களுக்கு காய்ந்துவிட்டது போல காட்சியளிக்கும்.

கட்டுப்பாடு :

⏩ இந்த புழுக்களை கட்டுப்படுத்த ஊடுபயிர் செய்யலாம். ஊடுபயிராக தட்டைப்பயிர் அல்லது உளுந்தம் பயிரை 1:4 (நான்கு பங்கு நிலக்கடலைக்கு ஒரு பங்கு தட்டைப்பயிர் அல்லது உளுந்தம் பயிர்) என்ற விகிதத்தில் பயிரிடலாம்.

⏩ விளக்கு பொறியையும், இனக்கவர்ச்சி பொறியையும் ஹெக்டருக்கு 5 எண்ணிக்கை வைத்து தாய் சுருள் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

⏩ புழுக்களின் தாக்குதல் அதிகரித்தால், 100 மில்லி வேப்பெண்ணெய்யுடன் ஒட்டும் திரவமான காதி சோப் மற்றும் 10 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கலாம்.

புகையிலைப்புழு தாக்குதல் :

⏩ இது பூ மொட்டுகள் மற்றும் பூக்களை தின்று சேதப்படுத்துகின்றன. இவற்றை விளக்கு பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம்.

⏩ இலைகள் மீது சுரண்டியது போன்ற அடையாளம் காணப்பட்டால் புகையிலைப்புழு தாக்குதல் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளலாம். வளர்ந்த புழுக்கள் பகலில் செடிகளுக்கு இடையே மண்ணில் வாழும். இரவில் இலைகளை முழுவதுமாக சேதப்படுத்தும்.

⏩ வயல் வரப்புகளின் ஆமணக்கு செடியினை வளர்த்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக இருப்பின் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிக்கலாம்.

அசுவினி பூச்சி தாகுதல் :

⏩ வளர்ச்சி அடைந்த அசுவினி பூச்சிகள் மற்றும் குஞ்சுகளும் கூட்டம் கூட்டமாக நிலக்கடலையில் வாழும். இவை இலை, தண்டு, பூ விழுதுகளில் உள்ள சாற்றினை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.

⏩ மேலும், தேன் போன்ற ஒருவித திரவத்தை செடிகள் மேல் சுரந்து பின் செடியின் சாறை உறிஞ்சும். இதனை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிக்கலாம்.

சேமிப்பு மற்றும் பாதுகாப்பு :

⏩ அறுவடைக்குப்பின் நிலக்கடலை விதைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க நிலக்கடலையை ஓடுகளை நீக்காமல் அப்படியே சேமித்து வைப்பது நல்லது.

⏩ ஓடு நீக்காத நிலக்கடலையை புரூக்கிட்ஸ் புழு, நெல் அந்துப்பூச்சிகள், சிவப்பு மாவு வண்டு ஆகியவை சேதப்படுத்தும். இதில் சிவப்பு மாவு வண்டு ஓடுகளுக்கு உள்ளே சென்று பருப்பை அரைத்து மாவாக்குகின்றன.

⏩ இதனை தடுக்க நிலக்கடலையை ஓடு நீக்காமல் நன்கு காயவைத்த பின்னர் சேமிக்க வேண்டும்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.