ஆண்டுக்கு 60 டன் மகசூல் தரும் கொய்யா ரகம்…!

VIVASAYAM
ஆண்டுக்கு 60 டன் மகசூல் தரும் கொய்யா ரகம்…!

⏩ மக்கள் விரும்பி உண்ணும் பழங்களிள் கொய்யாவும் ஒன்று. சந்தையில் கொய்யாப்பழங்களுக்கு நல்ல விலை உண்டு. இதனால், விவசாயிகள் பலர் கொய்யா சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

நான்காவது இடம் :

⏩ பழங்களின் உற்பத்தியிலும், சாகுபடி பரப்பிலும் நான்காவது இடத்தை கொய்யா பெற்றுள்ளது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

⏩ கொய்யாவில் நிறைய ரகங்கள் இருக்கின்றன. ஆனால், எல்.எம். 49 ரகம் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. வடமாநிலங்களில் இதனை சர்தார் ரகம் என்பார்கள்.

⏩ பழங்கள் உருண்டையாகவும், உள்புற சதைகள் வெண்மையாகவும், அதன் மேல் தோல் முதலில் பச்சையாக பிறகு பழுக்கும் போது மஞ்சள் நிறமாக மாறி விடும். பழத்தின் எடை 90 கிராம் முதல் 140 கிராம் வரை இருக்கும்.

ஏற்ற மண் மற்றும் நடவு :

⏩ இந்த ரக கொய்யா நல்ல வடிகால் வசதி மற்றும் பாசன வசதி உடைய பகுதிகளுக்கும், சற்று வறட்சியான பகுதிகளுக்கும் ஏற்றது. சற்று உப்புத்தன்மை கொண்ட மண்ணில் கூட சமாளித்து வளரும் தன்மை கொண்டது.

⏩ கொய்யா பதியன்களை நடவு செய்ய 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகள் எடுத்து அதில் அடிமண்ணுடன் தொழுஉரம் 10 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 1 கிலோ ஆகியவற்றை கலந்து இட்டு குழிகளை நிரப்ப வேண்டும்.

⏩ பின்னர் நடவுக்கு தயாராக உள்ள பதியன்களை நடவு செய்ய வேண்டும். பிறகு செடிக்கு அரை அடி அருகில் தள்ளி குச்சிகள் ஊன்றி காற்றினால் சாய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடவு இடைவெளி :

⏩ இந்த ரக கொய்யா நாற்றுகளை 6 மீட்டர் இடைவெளியில் நடவு செய்து பராமரிக்க வேண்டும்.

⏩ ஆனால் இதனை நெருக்கு நடவு முறையில் 2 மீட்டருக்கு 1 மீட்டர் என்ற இடைவெளியில் நடவு செய்யப்படுகின்றன. இந்த நெருக்கு நடவு முறையில் ஹெக்டருக்கு 5 ஆயிரம் செடிகளை பராமரிக்கலாம்.

மேலாண்மை :

⏩ எல்.எம். 49 ரகத்தில் கவாத்து செய்த பின்னர் உரமிடுதல் அவசியம். ஆண்டுக்கு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்கள் கவாத்து செய்ய மற்றும் உரமிட ஏற்ற காலங்களாக உள்ளன. 6 ஆண்டுகள் வயதான மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழுஉரம் கலந்து மேற்குறிப்பிட்ட காலங்களில் இட வேண்டும்.

⏩ மேலும் நீர் பாசனத்தின் போது பஞ்சகாவ்யா மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசலை கலந்து விட வேண்டும்.

மகசூல் :

⏩ இதன் மூலம் நடவு செய்த முதல் ஆண்டிலேயே 3 டன் வரை மகசூல் பெறலாம். 6 ம் ஆண்டில் 60 டன் வரை மகசூல் கிடைக்கும்.

⏩ இதற்கு சொட்டுநீர் பாசன வசதியும், திட்டமிட்ட உர நிர்வாகமும், கவாத்து செய்யும் நுட்பமும் தெரிந்திருக்க வேண்டும்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.