காய்கறிகள் உள்ள ரசாயனத்தை அகற்றுவது எப்படி ?

SAMAYAL
காய்கறிகள் உள்ள ரசாயனத்தை அகற்றுவது எப்படி ?

🌿 உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன. பயிர்கள் வளர்வதற்காக விவசாயிகள் பயன்படுத்துகிற ரசாயனங்கள் மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் ரசாயனங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.

🌿 காய்கறிகளை சுத்தம் செய்ய தூள் உப்பை விட சிறந்தது கல் உப்பாகும். ஒரு கைப்பிடியளவுக்கு கல் உப்பை சுத்தமான தண்ணீரில் போட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, அதில் பழங்கள் மற்றும் காய்கறிகளை போட்டு கழுவினால் பழங்களில் உள்ள ரசாயனம் அழிந்து விடும். ஏனெனில் உப்பில் உள்ள சோடியம், பூச்சி மருந்தின் வீரியத்தைக் குறைக்கக்கூடியது.

🌿 வெங்காயம், இஞ்சி, கேரட், ஆப்பிள், பீட்ரூட், மாம்பழம், ஆரஞ்சு, அவகேடோ, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை உரிப்பது சுலபமானது. இந்த காய்கறி மற்றும் பழங்களைப் பயன்படுத்தும்போது தோலை உரித்தாலே ரசாயனத் தாக்குதல்களில் இருந்து விடுபட முடியும். அதன் பிறகு காய்கறி, பழங்களை கழுவிவிட்டு பயன்படுத்தலாம்.

🌿 வினிகர் காய்கறிகளைச் சுத்தம் செய்ய சிறந்ததாகும். காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் மற்றும் ரசாயனங்களைக் கொல்லும் தன்மை வினிகருக்கு உள்ளது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, இரண்டு துளிகள் வினிகரைச் சேர்த்து அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் போட்டு சுத்தம் செய்து சாப்பிடலாம்.

🌿 மஞ்சள் தூள் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை மஞ்சளில் உள்ளது. ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து, அதில் 5 ஸ்பூன் மஞ்சள் தூளைச் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம் ஆறிய பிறகு, அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி பயன்படுத்தலாம். அதிகச் சூடான வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது.

🌿 பழங்கள் மற்றும் காய்கறிகளை தண்ணீரில் கழுவிய பிறகு, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இதனால் பழத்தில் உள்ள மேல் தோலில் ஒட்டியிருக்கும் மீதமுள்ள பூச்சி மருந்தும் வெளியேறிவிடும்.

🌿 இரண்டு எலுமிச்சை பழச்சாற்றில் 3 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்துகொள்ள வேண்டும். இதை 200 மி.லி தண்ணீரில் கலந்து, பழங்களின் மேல் தெளிக்க வேண்டும். அதன் பிறகு பழங்களைத் துடைத்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் எலுமிச்சைச் சாற்றில் உள்ள கிருமி நாசினி, பூச்சி மருந்தின் தாக்கதை குறைத்து விடும்.