கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு…!

VIVASAYAM
கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு…!

⏩ கால்நடைகள் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி இறந்து விடக்கூடும். அதை பற்றி இங்கு காண்போம்.

நச்சுத்தன்மை :

⏩ கால்நடைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவர்களை அணுகி உரிய காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடர்ந்து இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

இரண்டு வகைப்படுத்தலாம் :

⏩ கால்நடைகளை பாதிக்கும் நச்சுப்பொருட்களை இயற்கை நச்சு மற்றும் மனிதனால் ஏற்படும் நச்சு என்று இருவகைப்படுத்தலாம்.

⏩ இயற்கை நச்சு – நச்சுத்தாவரங்கள் சாப்பிடுதல், நச்சு உயிரினங்கள் தாக்குதல் ஆகியவை ஆகும்.

⏩ மனிதனால் ஏற்படும் நச்சு – தொழிற்ச்சாலை கழிவு, பூச்சிக் கொல்லி மருந்துகள், கெட்டுப்போன செயற்கைத் தீவன கலவைகள் ஆகியவற்றை ஆகும்.

இயற்கை நச்சு :

⏩ உதாரணமாக, இயற்கையில் சில இடங்களில் காணப்படும் பாறைகள் மற்றும் மண்ணில் புளோரின் போன்ற நச்சுப்பொருட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த இடங்களில் வளரும் தாவரங்களில் இந்த வகை நச்சு காணப்படும்.

⏩ இந்த தாவரங்களின் இலைகளை கால்நடைகள் உண்ணும் போது அந்த நச்சுத்தன்மை கால்நடைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

⏩ வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கால்நடைகள், ஆங்காங்கே விளையும் நச்சுத்தாவரங்களை அடையாளம் காணத் தெரியாமல் அவற்றை மேய்ந்து விடும். இதனால், அவற்றின் உடலில் நச்சு கலந்துவிடுகிறது.

நச்சு உயிரிகள் :

⏩ அடர்ந்த புதர்களில் நச்சு உயிரிகளான பாம்பு போன்ற உயிரிகள் மறைந்து வாழும், இந்த இடங்களில் கால்நடைகள் மேயும் போது பாம்பு தீண்டி விடும். இது போல் தீண்டும் போது கால்நடைகளின் உடலில் தீண்டிய தழும்பும், ரத்தம் வழிதல் காணப்படும். இதை வைத்து நச்சுயிரிகள் தீண்டியதை அடையாளம் காணலாம்.

⏩ எனவே கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் இடங்களை சரியாக கவனிப்பதன் மூலம் இது போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம்.

மனிதனால் ஏற்ப்படும் நச்சு :

⏩ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு கலந்த கழிவு நீரால் நீராதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த நீராதாரங்களில் உள்ள நீரை கால்நடைகள் குடிக்கும் போது நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கின்றன.

⏩ அடுத்ததாக, பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்த பின்பு மருந்து தெளிப்பான் சாதனம், தெளிப்புக்கருவி போன்றவற்றை நீராதாரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்துவர். அப்போது, அந்த சாதனங்களில் இருக்கும் நச்சு மருந்துகள் நீராதாரங்களில் பரவி அந்த தண்ணீரானது நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடுகின்றன. மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் இந்த நீரை அருந்தும் போது அவை அந்த நச்சால் பாதிக்கப்படுகின்றன.

⏩ தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரில் கடும் நச்சுத்தன்மை இருக்கும். இந்த கழிவுநீர் தேங்கும் இடத்தில் வளர்ந்துள்ள புல் பூண்டுகளை தின்னும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

⏩ இது போன்ற பாதிப்புகள் எல்லாம் மனிதனால் கால்நடைகளுக்கு செயற்கையாக ஏற்படுத்தப்படும் நச்சு பாதிப்புகள் ஆகும். மனிதர்கள் நீராதாரங்களை மாசுபடுத்தாமல் இருப்பதன் மூலம் கால்நடைகளுககு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பாதிப்பை அறியும் முறை :

⏩ கால்நடைகளின் உடலில் விஷம் ஏறியிருப்பதை சில அடையாளங்கள் மூலம் அறியலாம். நல்ல ஆரோக்கியமாக இருந்த கால்நடைகள் - தீவனம் எடுத்த சிறிது நேரத்திலோ, மருந்து கொடுத்த பிறகோ, உடம்பின் மேல் மருந்து தெளித்த பிறகோ, தீவனம் மாற்றிய பிறகோ உடல் நலம் பாதிக்கப்பட்டால் அது நச்சால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

⏩ கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்து காரணத்தை கண்டறிய வேண்டும்.

கண்டிப்பாக கவனிக்க வேண்டும் :

⏩ கால்நடைகள் திடீரென்று பாதிப்புக்கு உள்ளாகும் போது அருகாமையில் உள்ள பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகளை கவனிக்க வேண்டும்.

⏩ அதாவது, அண்மையில் தீவனத்தில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டதா, தீவனத்தில் ஏதாவது அசாதாரணமான வாசனையோ, பொருளோ காணப்பட்டதா, புதிதாக வாங்கிய தீவனமா, குடிக்கும் தண்ணீரில் ஏதாவது வாசனையோ நிற மாற்றமோ இருக்கிறதா என்பது போன்றவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

⏩ நோய்க்காக கொடுக்கப்பட்ட மருந்துகள் என்னென்ன, பூச்சிக்கொல்லி மருந்து, கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்கிறதா, எலி மருந்துகள் ஏதேனும் வைக்கப்பட்டிருக்கிறதா, பழைய கார் பேட்டரிகள், என்ஜின் ஆயில், கிரீஸ் மற்றும் இதர செயற்கை ரசாயனங்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் கொட்டகையை சுற்றி காணப்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால், இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் கூட பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

பரிசோதனை :

⏩ பொதுவாக, கால்நடைகள் நச்சினால் பாதிக்கப்பட்டு அது எதனால் என்று கண்டறிய இயலாத நிலையில், கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடல் பரிசோதனை செய்தும், உடல் உறுப்புகளில் இருந்து சில மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தும் கால்நடைகளில் நச்சுத்தன்மையை கண்டறியலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.