உயிரி உரம் விதை நேர்த்தி…!

VIVASAYAM
உயிரி உரம் விதை நேர்த்தி…!

⏩ ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிரி உரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகும். இரசாயன உரங்களுக்கு மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிரி உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களை புதுப்பிக்க ஒரு ஆதாரமாகவும் இருக்கிறது. அதில் விதை நேர்த்தி செய்வது பற்றி பார்ப்போம்.

பருவமழை :

⏩ வடகிழக்கு பருவமழையின் போது நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகிய பயிர்களை சாகுபடி செய்கின்றன. இவற்றை விதைப்பதற்கு முன்பாக உயிரி உரங்களான பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றுடன் விதைநேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது நோய் தாக்கம் குறைகின்றன.

வளர்ச்சி :

⏩ விதை நேர்த்தி செய்வதால் பயிர்களின் விளைச்சல் 20-30 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் உரங்களின் பயன்பாடு குறைகிறது. மேலும், மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண்வளம் பெருகுகின்றன.

⏩ இதனால் வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தாங்கி வளரும். பொதுவாக, உயிரி உரங்கள் இரண்டு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. ஒன்று பவுடர் வடிவத்தில் – 200 கிராம் பாக்கெட், மற்றொன்று திரவ வடிவத்தில் – 250 மில்லி, 500 மில்லி அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

நிலக்கடலை :

⏩ எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை விதைக்கு தலா 400 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா மற்றும் ஆறிய கஞ்சி ஆகியவற்றை கலக்க வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் திரவ வடிவ உயிரி உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை தலா 50 மில்லி கலந்து நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

நெல் :

⏩ ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை 300 மில்லி ஆறிய அரிசி கஞ்சியினை நன்கு கலக்க வேண்டும். பிறகு, அதனுடன் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவினை கலந்து நிழலில் உலர வைத்து பின்பு விதைக்கலாம்.

⏩ ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை தேர்வு செய்து 25 சதுர மீட்டர் சமமான இடத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு நீர் நிறுத்த வேண்டும். அதில் அசோஸ்பைரில்லம் 800 கிராம் மற்றும் பாஸ்போபாக்டீரியா 800 கிராம் ஆகியவற்றை நன்கு கரைக்க வேண்டும். அந்த நீரில் நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையுமாறு 15 முதல் 30 நிமிடங்கள் ஊற வைத்திருந்து பின்னர் நடவு செய்யலாம்.

⏩ திரவ வடிவ உயிர்உரங்களை பயன்படுத்துவதாக இருந்தால் மேலே குறிப்பிட்ட அளவு நீரை நிறுத்தி, தலா 150 மில்லி அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து அதில் நாற்றுகளை நனைத்து நடலாம்.

தானிய பயிர்கள் :

⏩ இதைப்போன்றே, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரை, பாசிப்பயறு, எள் போன்ற தானியங்களை விதைக்கும் முன்பு, ஏற்கனவே கூறியபடி ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா மற்றும் ஆறிய அரிசி கஞ்சி 300 கிராம் ஆகியவற்றை கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.