பேரிக்காய் சாகுபடி…!

VIVASAYAM
பேரிக்காய் சாகுபடி…!

⏩ பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று கூட அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில பேரிக்காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

⏩ குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிட்டல் நோய் எதிர்ப்பு அவர்கள் பெறலாம்.

⏩ சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து கணிசமான அளவு இதில் உள்ளது.

ரகங்கள் :

⏩ பேரிக்காயில் நாட்டு பேரீ, கீஃபர் பேரீ, நியூ பேரீ, வில்லியம் மற்றும் ஜார்கோ நெலி பேரீ ஆகியவை உள்ளன.

ஏற்ற மண் :

⏩ நல்ல வடிகால் வசதி கொண்ட, செம்மண் கலந்து களிமண் இதற்கு உகந்தது. அங்ககப் பொருட்கள் அதிகம் உள்ள மண்ணில் இவை நன்றாக வளரும்.

ஏற்ற தட்பவெப்பநிலை :

⏩ மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 – 6.2 வரை இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரம் வரை இதை பயிரிடலாம்.

ஏற்ற பருவம் :

⏩ பேரிக்காய் பயிரிடுவதற்கு ஜூன் முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவம் ஆகும்.

பயிர்ப்பெருக்கம் :

⏩ ஒட்டு கட்டிய செடிகள் அல்லது வேர் பிடித்த குச்சிகளை நடவிற்கு பயன்படுத்தலாம்.

இடைவெளி :

⏩ இதை 60 செ.மீ நீளம், அகலம், ஆழம் உடைய குழிகளுக்குள் நடவு செய்ய வேண்டும். செடிகளுக்குள் உள்ள இடைவெளி 5 மீட்டர் அல்லது 6 மீட்டர் இருக்க வேண்டும்.

உரம் :

⏩ மரங்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு, செடி ஒன்றிற்கு, 25 கிலோ தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ சாம்பல் மற்றும் மணிச்சத்து கொடுக்க வேண்டும்.

⏩ நீர் பாசனத்தில் பஞ்சகாவ்யா மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் கலந்து விடலாம்.

⏩ பேரிக்காய்க்கு நீர் அதிகம் தேவைப்படாது. இருப்பினும் தேவைக்கேற்ப நீர் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் மேலாண்மை :

⏩ பழங்கள் அறுவடை செய்தபின் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

⏩ மரங்கள் ஓரளவு வளர்ந்தவுடன் நடுக்கிளையின் நுனியை வெட்டி, பக்க கிளைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.

⏩ வயது முதிர்ந்த மரங்களிள் வரும் பக்கக் கிளைகளில் (இளந்தளிர் ஒட்டு மூலம்) தேவையான தாய்க்குச்சிகளை ஒட்டு கட்டி அதிக மகசூல் பெறலாம்.

பயிர் பாதுகாப்பு :

⏩ இதை அதிக பூச்சிகளோ, நோய்களோ தாக்குவது கிடையாது. எனினும் நோய்த் தடுக்கும் விதமாக, கவாத்து செய்தபின் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரடி ஆகியவை சமபங்கு கலந்து ஒருமுறை தெளிப்பது நன்று.

அறுவடை :

⏩ குறுகிய கால ரகங்கள் மே முதல் ஜூன் மாதத்தில் அறுவடைக்கு வரும். நீண்ட கால ரகங்கள் ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு வரும்.

மகசூல் :

⏩ மரம் ஒன்றிற்கு நாட்டு பேரீ 100 - 120 கிலோவும், கீஃபர் மற்றும் நியூ பேரீ 70 - 80 கிலோவும், வில்லியம் மற்றும் ஜார்கோநெலி 30 - 40 கிலோவும் (ஒரு வருடத்திற்கு) மகசூலாக கிடைக்கும்.

நன்மைகள் :

⏩ பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டைத் தணிக்கும். கண்கள் ஒளிபெறும். நரம்புகள் புத்துணர்வடையும். தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும். குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

⏩ மேலும் இதயப் படபடப்பு நீங்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற, தாய்ப்பால் சுரக்க, வாய்ப்புண் குணமாக, வயிற்றுப் போக்கு நிற்க, சிறுநீரக கல்லடைப்பு நீங்க பேரிக்காய் உதவுகிறது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.